நாடுதழுவிய ஊரடங்கு: “முறைசாரா பார்வை மாற்றுத்திறனாளி தொழிலாளர்களைக் காப்பாற்றுங்கள்” ஆணையருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கடிதம்:

,வெளியிடப்பட்டது
graphic helenkeller association for the welfare of the differently abled persons

 கொரானா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த 24.03.2020 முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், பார்வை மாற்றுத்திறனாளிகள் அதிலும் குறிப்பாக அமைப்புசாரா பார்வை மாற்றுத்திறனாளி தொழிலாளர்களான இரயில்  மற்றும் நடமாடும் வியாபாரிகளின் அன்றாட வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

     இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில், பொதுமக்களால் கடைபிடிக்கப்படும் சமூக விலகல் காரணமாக, பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளப் பிறரின் உதவியைப்பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, அமைப்புசாரா பார்வை மாற்றுத்திறனாளிகளின் நலனைப் பேணிடுமாறு, மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரிடம்  சில கோரிக்கைகளை ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் முன்வைத்துள்ளது. அவை:
1.            ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 1000 அனைவருக்கும் கிடைப்பதை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்களின் களப்பணியின் மூலம் உறுதி செய்தல். மேலும், அரசால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 1000 கூடுதல் நிவாரணத்தோகையினை,  அமைப்புசாரா மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்தல்.
2.            அரசு அறிவித்துள்ள இலவச ரேசன் பொருட்களின் அளவினை மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
3.            அமைப்புசாரா பார்வை மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் செறிந்து வாழும் பகுதிகளான தின்னனூர் மற்றும் செவ்வாய்ப்பேட்டை (திருவள்ளூர் மாவட்டம்) குளப்பாக்கம் மற்றும் மறைமலைநகர் (செங்கற்பட்டு மாவட்டம்) ஆணையூர் மற்றும் சக்கிமங்களம் (மதுரை மாவட்டம்) போத்தனூர் (கோவை மாவட்டம்)  ஆலம்பட்டி மற்றும் காந்திநகர் (திருச்சி மாவட்டம்) ஆகிய பகுதிகள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் பார்வை மாற்றுத்திறனாளிகள் வாழும் பகுதிகளை அடையாளம் கண்டு, அவ்வப்போது மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் பார்வையிடுவதோடு, அரசு மற்றும் தன்னார்வலர்களிடமிருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுத்தல்.
4.            உடல்நலக் குறைபாடு காரணமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்லும் பார்வை மாற்றுத்திறனாளிகளை சமூகவிலகல் என்ற பெயரில் அணுகுதலைத் தவிர்த்து, அவர்களிடம் கண்ணியமான அணுகுமுறை மேற்கொள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல்.
5.            ஏற்கனவே, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களால் செயல்படுத்தப்படும் நடமாடும் மறுவாழ்வு வாகனத்தின் (mobile vans) பயன்பாட்டை அதிகரித்தல். போன்ற ஆக்கபூர்வமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்