மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் மாற்றம், புதிய ஆணையராக திரு. ஜானி டாம் வர்கிஸ் நியமனம்:

,வெளியிடப்பட்டது

graphic Johny Tom Varghese
 மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் திருமதி. B. மகேஸ்வரி, நில சீர்திருத்தத் துறையின் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் புதிய ஆணையராக திரு. ஜானி டாம் வர்கிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 24ஆம் தேதி, திருமதி. B. மகேஸ்வரி இ.ஆ.ப. அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளைச் சந்திப்பதில்லை, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ஐ அமல்படுத்துவதில் மெத்தனமாகச் செயல்படுகிறார் என அவர்மீது மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கங்கள் தொடர்ந்து அதிர்ப்தி தெரிவித்ததோடு, அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.
கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி, பல்வேறு மாற்றுத்திறனாளி சங்கங்கள் ஒன்றிணைந்த மாற்றுத்திறனாளிகள் கூட்டு இயக்கம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் திருமதி. மகேஸ்வரி அவர்களை உடனடியாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கையோடு கோட்டை முற்றுகைப் போராட்டத்தைக் கையிலெடுத்தனர். இறுதியில் தலைமைச் செயலர் அவர்களின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நேற்று, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், திருமதி. மகேஸ்வரி இ.ஆ.ப. அவர்கள், நில சீர்திருத்தத் துறையின் உதவி ஆணையராக நியமிக்கப்படுவதாகவும், மீன்வளத்துறையின் கூடுதல் இயக்குநர் திரு. ஜானி டாம் வர்கிஸ் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையராக நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த திரு. ஜானி டாம் வர்கிஸ் அவர்கள், கடந்த 2013 குடிமைப்பணிகள் தேர்வில் நாட்டிலேயே எட்டாம் இடம் பிடித்து வெற்றிபெற்றவர்  என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் இந்தநடவடிக்கையை வரவேற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம், தலைமைச் செயலருக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளது. அதேசமயம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ்செயல்பட்டுவரும் சிறப்புப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதுதான் பல சீர்திருத்த நடவடிக்கைகள் துவங்கியிருக்கின்றன, இந்த சமயத்தில் ஆணையர் மாற்றம் என்பது அந்தப் பணிகளில் சுணக்கத்தையும், விரும்பத் தகாத தலையீடுகளையும் ஏற்படுத்தும் என கவலை தெரிவிக்கிறார்கள் அரசு சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *