நன்றி ஆனந்தவிகடன்: “விழிகளிலா இருக்கிறது வெளிச்சம்?”

,வெளியிடப்பட்டது
ஜாகிர் உசேன்
அருண் சின்னதுரை
சாய் தர்மராஜ்.ச

“எத்தனை முறை கீழே விழுந்தாலும் பயப்பட மாட்டார். அவரின் தன்னம்பிக்கைதான் அவரை இந்த அளவு உயர்த்தியிருக்கிறது” என்று நெகிழ்கிறார் நசிமா.
ஜாகிர் உசேன்

கறிக்கடையில் ஆள்காட்டி விரலின் உதவியால் எடை போட்டுக்கொண்டி ருந்தார் ஜாகிர். கையால் எண்ணிய பணத்தை, வாயில் வைத்து அடுக்கிக் கொள்கிறார். 10 ரூபாய் முதல் 2000 வரை உள்ள நோட்டுகளை மதிப்பு வாரியாகப் பிரித்துக்கொண்டார். கல்லாப் பெட்டி அடையாளத்திற்கு, தனது இடது கால் அருகே சிறிய கல் வைத்திருக்கிறார். வெட்டுக்கட்டை கைவசத்திற்கு வலது காலையும் வைத்துக்கொண்டார். கல்லாவிற்கும், வெட்டுக் கட்டைக்கும் இடையே எடை பார்க்கும் தராசு அமைந்திருக்கிறது.
ஜாகிர் புழுதிப்பட்டியில் கறிக்கடை வைத்திருப்பவர். பார்வைச்சவால் கொண்டவர் என்பதுதான் ஆச்சர்யம். பேசும் ஒலியை வைத்து எந்த திசையில் இருந்து பேசுகிறார்கள் என, கவனித்துப் பேசுகிறார். யார் உதவியும் இல்லாமல் கடையை நடத்துகிறார்.
ஞாயிற்றுக்கிழமை வியாபாரத்தை முடித்துவிட்டுப் பேச ஆரம்பித்தார் ஜாகிர்.
என் முழுப்பெயர் ஜாகிர் உசேன். சொந்த ஊர் சிவகங்கை ராதாபுலி. அம்மாச்சிக்கு ஆண் குழந்தையில்லை என்று என்னை ராமநாதபுரத்தில் வளத்தாங்க. அப்பா வெளிநாட்டில் வேலை செய்ததால் அம்மாவும் என்கூடவே இருந்தாங்க. ஆறாவதுவரை நல்லாத்தான் படிச்சேன். அப்போது சிறிய அளவு கண்பார்வை இருந்தது. அதனால் கண்கள் அருகில் புத்தகங்களைத் தூக்கி வைத்துப் படிப்பேன். 7-ம் வகுப்பு போன பிறகு கண்கள் முழுமையாகத் தெரியவில்லை. அதனால் பள்ளியில் படிக்க முடியவில்லை. அழுதேன், புரண்டேன். பார்வையற்றோர் சிறப்புப் பள்ளி சென்று படி என்று பள்ளி ஆசிரியர் சொன்னார். ஆனால் படிக்கவில்லை. வீட்டில் தான் இருந்தேன். பார்வையில்லாதவனாய் இருந்ததால் என்னை வெளியேயும் அனுப்பவில்லை. பிறகு பல்வேறு இடங்களுக்குக் குடும்பத்துடன் இடம் பெயர்ந்தோம். வாழ்க்கை திசை மாறிப்போனது.
புழுதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அப்பாவின் நண்பர்கள் ஒருவரது ஃபைனான்ஸ் கம்பெனியில் வேலை கிடைத்தது. அவரிடம் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என இரண்டு லட்சத்தைக் கொடுத்தேன். ஆனால் அவரால் ஏமாற்றப்பட்டேன். வாழவழியில்லாமல் நின்றேன். எதிர்காலமே சூனியமாகிப்போனது.
அந்தச் சமயத்தில்தான் கோழிக் கறி வெட்டக் கற்றுக்கொண்டேன். முதல் முறையாக வெட்டும் போது என்னை யாரும் கறிவெட்ட அனுமதிக்கவில்லை. கண்ணு தெரியாத பய கைய வெட்டிக்கிட்டா, போச்சுஎன்று என்னை யாரும் வேலை செய்யவே விடவில்லை. மனதுக்குள் ஒரு கோபம், ஆவேசம். நான் இதைச் செய்துகாட்டுவேன். என்னால் முடியும் என நிரூபிக்க வேண்டும் எனக் கத்தியைப் பிடித்தேன். கறிவெட்டினேன். எல்லாரும் அதிர்ந்து போனார்கள். நான் கண் தெரியாததுபோல நடிக்கிறேனோ என்று சந்தேகப்பட்டார்கள். ஆனால், பின்பு உண்மையைச் சொல்லி விளக்கினேன். அப்போது பிடித்த கத்திதான். பின்பு என்னிடம் இருந்த சேமிப்பை வைத்து துவரங்குறிச்சியில் கடை போட்டேன். மக்கள் ஆதரவு தந்து என்னை வாழவைத்தார்கள்.
குடும்பத்தினருடன்…
அதே சமயம் மற்ற கறிக்கடைக்காரர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்தேன். எனக்குக் கிடைத்த மக்களின் அனுதாபமும் ஆதரவும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் எல்லாரும் சேர்ந்து எனக்குக் கடை கிடைக்க விடாமல் செய்தார்கள். பின்புதான் புழுதிப்பட்டிச் சத்திரத்தில் கடை போட யோசனை ஏற்பட்டு, கடைபோட்டேன். 25 ஆண்டுகளுக்கு மேல் இங்குதான் வியாபாரம் நடக்கிறது. புறம்போக்கு நிலத்தில் கடை போடக்கூடாது என இங்கேயும் மிரட்டப்பட்டேன். அதிகாரிகளைப் பார்த்துப் பேசினேன். என்மீது கருணை கொண்டு பிரச்னைகளை முடித்து வைத்தனர்.
அதற்குப் பிறகு எனக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. நான் பார்வையற்றவன் என்பதால் பல சவால்கள். யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. ஆனால் என் மனைவியின் பெரியப்பா என்னை நேரில் வந்து பார்த்தார். அந்த நேரத்தில் நான் கறிக்கடையில் வேலை செய்துகொண்டிருந்தேன். என் வேலையையும், வேகத்தையும் பார்த்த அவர், ‘இவன் காலம் பூரா கஞ்சி ஊத்துவான்என்று நம்பிக்கையோடு திருமணம் செய்துகொடுத்தார். இப்போது எங்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் நசீர் அகமது +2 படிக்கிறான், இரண்டாவது பையன் பரீத் அகமது 7-வது படிக்கிறான்.
பள்ளி விடுமுறை நாள்களில் என் மகன்கள் கடையில் உதவியாக இருப்பார்கள். படிக்கிற பசங்க இங்க வரவேண்டாம் என்றாலும் கேக்க மாட்டாங்க. அவங்க விருப்பத்துக்கு விட்டுவிடுவேன். மற்ற நாள்களில் கறிக்கடையை நான் மட்டும்தான் பார்த்துக்கொள்வேன். இந்தக் கடை எனக்குப் பழகிவிட்டதால் வேலை செய்வது எளிது. கால்களில் தட்டி கடையின் அளவை அளந்துகொண்டு பணி செய்கிறேன்.
என்னால் கம்ப்யூட்டர் தராசில் எடை பார்க்க முடியாது என்பதால் சாதாரணத் தராசைப் பயன்படுத்துகிறேன். நானே கோழியை உரித்து சுத்தம் செய்து. வெட்டி எடை போட்டு விற்கிறேன். பணத்தைக் கை அளவுகள் கொண்டு கண்டுபிடிக்கிறேன். பட்டன் போன் வைத்துள்ளதால் எளிமையாகப் பயன்படுத்த முடியும். நிறைய போன் நம்பரும் மனப்பாடமாக வைத்துள்ளேன்என்று உற்சாகத்துடன் ஜாகிர் பேசப் பேச, ஆர்வமாகக் கவனிக்கிறார் அவர் மனைவி நசீமா பேகம்.
இவர் கஷ்டப்பட்டாலும் என்னையும் என் குழந்தைகளையும் சந்தோஷமாக வைத்துக்கொள்கிறார். பல முறை சறுக்கியிருக்கிறார். ஆனால் ஒரு முறைகூடப் பின்வாங்க மாட்டார். அவருக்கு அதிக நம்பிக்கையை அல்லா கொடுத்துள்ளார். அவரின் தன்னம்பிக்கை குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்என்றார்.
நசீமாவின் கைகளை ஆதரவுடன் பற்றிக்கொள்கிறார் ஜாகிர். அதில் அவ்வளவு காதல்!

 

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்