மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர் அதிகாரிகளின் சட்ட விரோத செயல்பாடு! அமைச்சர் வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் ஆக-29 முதல் சென்னை கோட்டை தொடர் முற்றுகை!!

,வெளியிடப்பட்டது
graphic நம்புராஜன்

 மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளுக்கு மாறாக பல்வேறு வகைகளில் வினையாற்றும் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எமது கூட்டியக்கம் கடந்த ஜூலை-10 முதல் சென்னை கோட்டை தொடர் முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தது. அந்நிலையில், ஜூலை-4 ஆம் தேதி தலைமை செயலகத்தில் எமது கூட்டியக்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாநில சமூகநலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் இக்கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதே வேளையில் சிறிது கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து எமது கூட்டியக்கம் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தது.
ஆனால், ஒரு மாத காலம் கடந்த பின்னரும், இக்காலத்தில் தமிழகத்தில் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையிலும் சமூகநலத்துறை அமைச்சர் அளித்த வாக்குறுதி எந்த வகையிலும் தமிழக அரசால் கண்டுகொள்ளப்படவில்லை. அப்படியெனில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்திற்கு எதிராக வினையாற்றும் உயரதிகாரிகளை பாதுகாக்கவே தமிழக அரசு விரும்புவதாகவே எமது கூட்டியக்கம் கருதுகிறது.
நீதிமன்றத்தின் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகிய அதிகாரி மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையா?
————————————–
நாடாளுமன்றம் இயற்றிய மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், மனநல பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்டவற்றை தமிழகத்தில் நிறைவேற்ற முழுமையான விதிகள் உருவாக்கப்படாததால், சட்டங்கள் அமலாக்கப்படாமல் முடக்கப்பட்டுள்ள நிலைமை. மாற்றுத்திறனாளிகள் நலன்களுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கிய நிதியில் 28 கோடி ரூபாயை திருப்பி அனுப்பிய வெட்கக்கேடு. மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில சிறப்பு நிதி ரூ.5 கோடியை பயன்படுத்தாத அவலம்.
மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு சட்டப்படியான உரிமைகள் நிலைநாட்டப்படாததால் உயர்நீதிமன்றத்தின் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ள மாற்றுத்திறனாளி துறை உயரதிகாரிகள். இதனால் சர்வதேச சமூகத்திடம் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது மொத்தத்தில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை பாதுகாப்பதற்குத்தான் தாங்கள் என்பதை மறுக்கும் அதிகாரிகள். இப்படிப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையா? என கேட்க விரும்புகிறோம்.
எனவே, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் தற்போதைய மாற்றுத்திறனாளிகள் துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டுமென்ற நியாயமான கோரிக்கை மீது அமைச்சரின் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாததாலும், தமிழக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளதாலும் வேறு வழியின்றி ஆகஸ்ட்-29 முதல் சென்னை கோட்டையை தொடர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திட எங்கள் கூட்டு இயக்கம் தீர்மானித்துள்ளது என்பதை அறிவிக்கின்றோம்.
S.Namburajan T.M.N. Deepak
TARATDAC Dec-3 Movement
P. Manoharan K.Jamal Ali
NFB President- TNSFD
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்