மாற்றுத்திறனாளிகளுக்கே அநீதி இழைக்கும் மாற்றுத்திறனாளி நலத்துறை ஆணையர் மற்றும் செயலரை உடனடியாக மாற்றுக! டாராட்டக் கோரிக்கை:

,வெளியிடப்பட்டது

graphic டாராட்டக் பொதுச்செயலாளர் நம்புராஜன்
 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர்  மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் இருவரும் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும், இவர்களை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து டாராட்டாக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சி.விஜயராஜ் குமார் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையராக மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி பி. மகேஷ்வரி ஆகியோர் பணியில் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் சட்ட உரிமைகளை பாதுகாக்கவும், மற்ற துறைகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை தலையீடு செய்து நிலைநாட்டவும் வேண்டிய முக்கிய உயர் பொறுப்புகளில் உள்ள இவர்கள் இருவரும் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்பட மறுக்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் இவர்களை எளிதில் சந்திக்க முடியாதவர்களாகவும், இவர்களே தலையீடுகள் செய்து செயலாற்ற வேண்டிய நடவடிக்கைகளில் இருந்து கண்டுகொள்ளாமல் விலகி நிற்பதும், மாற்றுத்திறனாளிகளின் நலன்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லாமல் இவர்கள் செயல்படுவதையே காட்டுகிறது.
குறிப்பாக, அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்திலும் இதர பயனாளிகளைவிட 25% அளவு தொகை உயர்த்தி வழங்குவதுடன், 5% திட்ட அளவினை மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டுமென ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 தெளிவாக கூறியுள்ளது.
ஆனால், தமிழக அரசு சமீபகாலத்தில் செயல்படுத்திய பொங்கல் சிறப்பு உதவித்தொகை ரூ.1000/வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000/- ஆகிய திட்டங்களில் இந்த விதிகள் அமல்படுத்தாததை சுட்டிக்காட்டியும், இந்த இரு அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டினர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்குப் பிறகும், சட்ட விதிகளை அமல்படுத்தாமல், புறம்பான விளக்கங்களை கூறி மாற்றுத்திறனாளிகளுக்கே அநீதி இழைக்கின்றனர்.
எனவே, மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறையற்ற, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்த இரு அதிகாரிகளையும் இத்துறைகளில் இருந்து அகற்றி, மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை கொண்ட பொருத்தமான அதிகாரிகளை உடனே நியமிக்க தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தமிழக அரசை வலியுறுத்திக் கோருகிறது. என முடிகிறது அந்த அறிக்கை.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்