பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், 90 விழுக்காடு மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி:

,வெளியிடப்பட்டது

graphic பதிலி எழுத்தர்கள் உதவியுடன் தேர்வெழுதும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள்
 தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் நடந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அரசு பொதுவிடுமுறையாக அனுசரிக்கப்படும் புனிதவெள்ளி நாளான இன்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் 91.30 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் 90 விழுக்காடு தேர்ச்சி:

கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும், மாற்றுத்திறனாளிகள் 90 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனைபுரிந்துள்ளனர். கடந்த மார்ச் ஒன்றுமுதல் 19ஆம் தேதிவரை நடந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை சிறப்புப் பள்ளிகள் மற்றும் ஒருங்கிணைந்த கல்வி வாயிலாகவும், தனித்தேர்வர்களாகவும் எதிர்கொண்ட 2697 மாற்றுத்திறனாளிகளில் 2404 மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

95.83 விழுக்காடு தேர்ச்சி பெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகள்:

மொத்தம் 408 பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வை எதிர்கொண்டு அதில் 391 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமாக 44 பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களில் 42 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

செவிச்சவாலுடையோரின் தேர்ச்சி விழுக்காட்டில் முன்னேற்றம்:

கடந்த ஆண்டைவிட செவிச்சவாலுடையோரின் தேர்ச்சி விழுக்காடு 0.17 விழுக்காடு அதிகரித்துள்ளது. மொத்தம் தேர்வெழுதிய 585 மாணவர்களில் 520 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதிகமாக சென்னையில் 106 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 94 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஆயிரத்திற்கு மூன்று குறைவு:

உடல்ச்சவால்கொண்ட மாற்றுத்திறனாளிகள் 997 பேர் இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எதிர்கொண்டார்கள். அவர்களுள் 876 மாணவர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர். இது 87.86 விழுக்காடு ஆகும். வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக தேர்வெழுதிய 59 பேரில் 51 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்வெழுதிய  707 இதர மாற்றுத்திறனாளிகளில் 617 பேர் தேர்ச்சிபெற்று சாதனைபடைத்துள்ளனர்.

சிறப்புப் பள்ளிகளில் நூறு விழுக்காடு தேர்ச்சி:

பூவிருந்தவல்லி, திருச்சி மற்றும் தஞ்சாவூரில் உள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முறையே, 28, 18, 28 மொத்தம் 74 மாணவ மாணவியரும் தேர்ச்சிபெற்றுள்ளனர். அதுபோலவே, தஞ்சாவூர் மற்றும் தர்மபுரியில் இயங்கிவரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலா 20 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் அனைவரும் தேர்ச்சிபெற்றதன் மூலம், நூறு விழுக்காடு தேர்ச்சியுடன் அரசு சிறப்புப் பள்ளிகள் சாதனைபடைத்துள்ளன.

  வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்