தேர்தல் ஆணையத்தின் கவனக்குறைவு; பிரெயிலி முறையில் வாக்களிப்பதில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குப் புதிய சிக்கல்:

,வெளியிடப்பட்டது
graphic பிரெயில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாக்குப்பதிவு மின்னணு இயந்திரம்

 பார்வை மாற்றுத்திறனாளிகளும் சம பங்கேற்புடன் வாக்களிக்கும் வகையில் கடந்த 2009 முதல் இந்தியத் தேர்தல் ஆணையம் பிரெயில் முறையில் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மின்னணு வாக்களிக்கும் இயந்திரத்தில் வேட்பாளர்களுக்கு அருகில் அவர்களுக்கான எண்கள் வரிசையாக பிரெயில் ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட்டிருக்கும். வாக்களிக்கும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளிக்கு பிரெயில் வடிவிலான வேட்பாளர் பட்டியல் (ballot sheet) வாக்குச்சாவடியில் வழங்கப்படும். அதில் தனக்கு விருப்பமான வேட்பாளரின் வரிசை எண்ணை அறிந்துகொள்ளும் அந்தப் பார்வை மாற்றுத்திறனாளி, மின்னணு வாக்கு இயந்திரத்தில் அந்த எண்ணைத் தடவிப்பார்த்து, உறுதிசெய்துகொண்டு, தனது வாக்கினைச் செலுத்துவார்.

     இந்த நடைமுறையின்படி, பிரெயில் முறையில் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் வேட்பாளருக்கான வரிசை எண்களாக மின்னணு இயந்திரத்தில் ஒட்டப்பட்டிருக்கும். அதாவது, ஒரு மின்னணு வாக்கு இயந்திரத்தில் 1 முதல் 16 வரை அந்தந்த வேட்பாளருக்கு நேராக அவை ஒட்டப்பட்டிருக்கும். போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 16ஐ தாண்டினால், அடுத்த மின்னணு வாக்கு இயந்திரத்தில் 17 முதல் எண்கள் தொடங்கும். வாக்கு இயந்திரங்களின்  மேல் பகுதியில், பிரிவு 1 (Ballot Unit I) பிரிவு 2 (Ballot Unit II) என பிரெயிலில் எழுதப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். ஒருவேலை எனது தெரிவு 20ஆக இருக்கும் பட்சத்தில் நான் இரண்டாவது வாக்கு இயந்திரத்தில் 20 எண்ணைத் தடவிப்பார்த்து, என் வாக்கைச் செலுத்த முடியும். தேர்தல் ஆணையத்தின் இந்தநடைமுறை பார்வையற்றோர் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்டது.
    இந்த நடைமுறைதான் இந்தத் தேர்தலிலும் தொடரும் என்ற எண்ணத்தோடே, நேற்று மின்னணு வாக்கு இயந்திரத்தில் பிரெயில் ஸ்டிக்கர்கள் ஒட்டுவது குறித்த செய்முறை நிகழ்விற்காக ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நானும் சக ஆசிரியர் திரு. பாஸ்கர் அவர்களும் சென்றிருந்தோம். அங்கு நாங்கள் கண்டது எங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அங்கு மின்னணு இயந்திரங்களில் பிரெயில் ஸ்டிக்கர்களுக்குப் பதிலாக எண்கள் அப்படியே அந்த இயந்திரத்திலேயே (Engraved) பொறிக்கப்பட்டிருந்தன. அதாவது, எல்லா இயந்திரங்களிலும் 1 முதல் 16 என்பதாகவே அந்த எண்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
அதாவது, 25ஆவது வரிசை எண்கொண்ட ஒரு வேட்பாளரை பார்வையுள்ள நபர் எளிதில் 25 என்ற எண்ணை வைத்து அடையாளம் காண இயலும். ஆனால், அதே 25 வரிசை எண்கொண்ட வேட்பாளரை ஒரு பார்வை மாற்றுத்திறனாளி தேடினால், 2ஆவது இயந்திரத்தில் அந்த எண்  இருக்காது. அந்த இயந்திரத்திலும் 1 – 16 வரைதான் இருக்கும். எனவே ஒரு பார்வை மாற்றுத்திறனாளி 25 என்பதற்குப் பதிலாக 25-16=9 என்று கணக்கிட்டு, அவர் வாக்கைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ள பிரெயில் ஸ்டிக்கர்களில் புள்ளிகள் அத்தனை தரமானதாகவும் இல்லை என்பது மற்றொரு குறைபாடு. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, இந்த பிரச்சனையை தேர்தல் ஆணையரின் கவனத்திற்குக் கொண்டுசெல்வதாகச் சொன்னார்கள். தேர்தல் ஆணையம் இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது, பார்வை மாற்றுத்திறனாளிகளைக் கலந்தாலோசித்திருந்தால் இந்த சிக்கலைத் தவிர்த்திருக்கலாம்.
இவன் ப. சரவணமணிகண்டன்
துணைச்செயலர்
ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்