பல்நோக்கு அடையாள சான்றை அங்கீகரிக்கக் கோரிய வழக்கு: ரயில்வே அமைச்சகம் பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

,வெளியிடப்பட்டது

மாற்றுத் திறனாளிகள் சலுகை அடிப்படையில் ரயில் டிக்கெட்டை பெற அவர்களுக்கான பல்நோக்கு அடையாள அட்டையை (யுடிஐடி) பயன்படுத்துவதை அங்கீகரிக்க வேண்டுமெனக்கோரி  ஊனமுற்றோருக்கான தேசிய மேடை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல்  செய்திருந்த பொதுநல மனுவிற்கு    ரயில்வே அமைச்சகமும், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை அமைச்சகமும் பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த பொதுநலமனு விபரம் வருமாறு:
நலத்திட்டங்களைப் பெறுவது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த  மாற்றுத் திறனாளிகளுக்காக பல்நோக்கு அடையாள சான்று (யுடிஐடி) என்ற ஒற்றை சான்றை 2016-இல் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த பல்நோக்கு சான்றுக்கான சட்ட அங்கீகாரத்தை ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 பிரிவு 58, உட்பிரிவு (3) அளித்துள்ளது. இந்த சான்று மூலம் சட்டப்படியாக நாடு முழுவதும் அனைத்துத் துறைகளிலும்  சலுகைகளைப் பெற முடியும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில் கட்டணங்களில் வழங்கப்படும் சலுகையைப் பெற வதற்கு ரயில்வே நிர்வாகம் தனியொரு அடையாள அட்டையை கடந்த 2015-ஆம் ஆண்டு சுற்றறிக்கை வெளியிட்டு  கட்டாயப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது.  யுடிஐடியை ரயில்வே நிர்வாகம் ஏற்க மறுத்து வருகிறது. இது ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்திற்கு விரோதமாக உள்ளது. மேலும், எந்த அடையாள அட்டையைப் பயன்படுத்துவது என்ற குழப்பமும் மாற்றுத் திறனாளிகள் மத்தியில் நிலவுகிறது.
எனவே, ரயில் பயண சலுகைகளைப் பெற ரயில்வே நிர்வாகம் தனியாக அடையாள அட்டை வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். ரயில்வே சலுகை டிக்கெட் பெற யுடிஐடியை பயன்படுத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி அனுப் ஜெயராம். பம்பானி ஆகியோர் முன்னிலையில் நேற்று(மார்ச்-13) அன்று விசாரணைக்கு வந்தது.  இந்த பொதுநல மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்  உரிய பதில் அளிக்கும்படி மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகத்திற்கும், ரயில்வே அமைச்சகத்திற்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை சார்பில் மூத்த வழக்கறிஞர் சுரேந்திரநாத் ஆஜராகி வாதாடினார்.  வழக்கு ஏற்பாடுகளை வழக்கறிஞர்கள் கே.ஆர். சுபாஷ்சந்திரன் மற்றும் எம்.ஜி. யோகமய்யா ஆகியோர் செய்திருந்தனர்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்