ஊனத்தை அரசியல் நையாண்டி செய்த பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்யக் கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் கூட்டமைப்பு சார்பில் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாநில துணைத் தலைவர் பி.எஸ்.பாரதி அண்ணா புகார் அளித்தார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கரக்பூரில் உள்ள மத்திய அரசின் உயர்க் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (ஐஐடி) சார்பில் நடைபெற்ற “ஸ்மார்ட் இந்திய ஹக்கத்தான் 2019” நிகழ்ச்சியையொட்டி அந்த நிறுவன மாணவர்களுடன் காட்சிவழி ஊடகம் வழியாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.
டிஸ்லெக்ஸியா என்ற ‘கற்றல் மாறுபாடு’ குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவக்கூடிய வகையில் கரக்பூர் ஐஐடி நிறுவனத்தில் மேற்கொண்டு வரும் ஆய்வு திட்டத்தை திக்ஷா ஹரியால் என்ற மாணவி, பிரதமரிடம் விளக்கிப் பேசிக்கொண்டிருந்தார். மாணவி திக்ஷா ஹரியால் பேசிக்கொண்டிருந்தபோதே, இடைமறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “அப்படின்னா அது 40, 50 வயதுள்ளவர்களுக்கும் பயன்படும்தானே” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பெயர் குறிப்பிடாமல் கேலி செய்தார். மேலும் “அவரின் அம்மாவும் மகிழ்ச்சியாக இருப்பார் அல்லவா” என சோனியா காந்தியையும் பெயர் குறிப்பிடாமல் மோடி கேலி செய்தார். நரேந்திர மோடியின் கேலி, கிண்டலை திக்ஷா ஹரியால் மாணவியுடன் இருந்த சக மாணவர்கள் கேலிக்கையாக கைதட்டி ஆரவாரம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளிகளையும் டிக்ஸ்லெக்ஷியா பாதித்தவர்களையும் குறித்து மாணவி திக்ஷா ஹரியால் பேசியபோது, அதனை கனிவோடு கவனித்து, மாற்றுத்திறனாளிகளுக்கான ஆய்வை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக, மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தை இழிவுபடுத்தி, அரசியல் நையாண்டிக்கு பயன்படுத்தும் வகையில், அரசு பொது நிகழ்ச்சியில் நாட்டின் பிரதமர் அப்பட்டமாக சட்ட விரோதமாக நடந்துகொண்டது, பார்வையில் குறிப்பிட்டுள்ள சட்டப்பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். நரேந்திர மோடி அவர்களின் செயல்பாடு ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு மன வேதனையை உருவாக்கியிருக்கிறது.
இதுகுறித்து எமது சங்கம் சார்பில் கடந்த 4ஆம் தேதி பத்திரிக்கை மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக செய்தி அறிக்கை வெளியிட்டிருந்தோம். அதில் பிரதமர் நரேந்திரமோடி தன்னுடைய குற்றத்திற்காக வெளிப்படையாக மன்னிப்புக் கோரவேண்டும் என கோரியிருந்தோம். ஆனால் இன்று (மார்ச் 6) வரை பிரதமர் மோடி மன்னிப்பு ஏதும் கோரவில்லை. எனவே தாங்கள் இந்த புகாரை பெற்று, விசாரணை செய்து, சட்ட ரீதியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநில செயலாளர்கள் பி.ஜீவா, டி.வில்சன், துணைத் தலைவர் எஸ்.சண்முகம், என்.சாந்தி, இணை செயலாளர்கள் ஆர்.ஜெயசந்திரன், எஸ்.கே.மாரியப்பன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி, தென்சென்னை மாவட்ட நிர்வாகி சுரேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Be the first to leave a comment