#I condemn an irresponsible PM:

,வெளியிடப்பட்டது
ப. சரவணமணிகண்டன்
      ஒரு கல்லூரியில் பல மாணவர்களுக்கிடையே கலந்துரையாடுகிறார் நமது மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள். அப்போது டிஸ்லெக்சியா (dyslexia) குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் குறித்தும், அவர்களின் முன்னேற்றத்திற்காக நாம் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்தும் பேச முனைகிறார் ஒரு மாணவி. நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறையும் திவ்யங் புனித உடல்கொண்டோர்மீது மாறாப் பாசமும் கொண்டிருக்கிற இந்த நாட்டின் பொறுப்பான பிரதமர் என்ன செய்கிறார் தெரியுமா? அந்த மாணவியின் ஆக்கபூர்வமான பேச்சைத் தன் அரசியல் எதிரிகளைக் கிண்டல் செய்ய பயன்படுத்திக்கொள்கிறார். அவரின் கலாய்த்தலுக்குப் பிற மாணவர்கள் சிரிக்க, இந்த மாணவியோ, ஒன்றும் புரியாதவராய் தன் பொறுப்பான உரையைத் தொடர்கிறார். மீண்டும் அந்த மாணவியை இடைமறிக்கும் மோடி அவர்கள், தன் அரசியல் எதிரிகளை மீண்டும் கலாய்க்கிறார். இதற்கும் அங்கு பலத்த சிரிப்பொலி.

 இந்த நிகழ்வால் மாற்றுத்திறனாளிகள் அதிகம் புண்பட்டிருக்கிறார்கள் என்பதைவிட, அவர்களின் மறுமலர்ச்சிக்காக உழைக்கும் ஒவ்வொருவரும் அந்த பெண்ணின் வழியே உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதுவும் யாரால்? ஒரு நாட்டின் பிரதமரால். ஒரு தேசத்தின் பிரதமர் முன்னிலையில், சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்கள் குறித்த ஒரு கருத்தை முன்வைக்கிறார் அந்த மாணவி. வந்திருப்பவர் பிரதமர், நிச்சயம் இந்தப் பிரச்சனை குறித்து அவர் அக்கறை கொள்வார். அதனால், டிஸ்லெக்சியா குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் நல்லதொரு மாற்றம் வரும் என்கிற அந்த மாணவியின் அழுத்தமான நம்பிக்கையையும், உயரிய நோக்கத்தையும் ஒரே நொடியில் உங்களின் கீழான அரசியல் நையாண்டிகளால் பொடித்துப் போட்டுவிட்டீர்கள் பிரதமர் அவர்களே.
     நீங்களும், உங்களைக் குளிர்விக்க, உங்கள் கலாய்த்தலுக்குக் கைகொட்டிச் சிரித்த பிற மாணவ இயந்திரங்களும் மிகுந்த தலைக்கனம் கொண்ட ஓர் அரசர் குழாமை ஒத்திருக்க்கிறீர்கள். உங்கள் கிண்டல்களைக்கூட சரியாக உள்வாங்கிக்கொள்ளாத அந்த அப்பாவி மாணவி, இந்த தேசத்தின் ஏழை எளிய மக்களை அப்படியே உருவகித்து நிற்கிறார்.     அவளின் ஒப்பற்ற நோக்கத்தைச் சிதைத்து, மனதளவில் துகிளுரித்திருக்கிறீர்கள். நீங்கள் தேசத்தைக் காக்கவந்த கலியுகக் கண்ணன் என்று உங்கள் அடியார்கள் ஆலாபனை செய்துகொண்டிருக்க, இல்லை, இல்லை, நான் துரியோதனன் குழாம்எனச் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.
     மாற்றுத்திறனாளிகளுக்கு திவ்யங் (புனித உடல்கொண்டோர்) என இயல்புக்கு முற்றிலும் பொருத்தமில்லாத வெற்று புகழ்ச்சொல்லை நீங்கள் சூட்டியபோதே எமக்குத் தெரியும். என்றாவது ஒருநாள் எங்களுக்கு உங்களால் செருப்படி கிடைக்கும் என்று. நிலத்தை பூமித்தாய் என்றும், நாட்டை பாரதமாதா என்றும் வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக்கொண்ட அதே கூட்டம்தான், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய், பெண்களை அடிமைகளாய் நடத்திவந்திருக்கிறது. தாங்கள் அந்தக் கூட்டத்தின் ஒப்பற்ற பிரதிநிதியாயிற்றே.
     நாட்டின் மேல்தட்டுவாசியையும், விளிம்புநிலை அன்னாடங்காட்சியையும் ஒன்றாக பாவித்துப் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டிய இந்த நாட்டின் பிரதம அமைச்சரே, மலிவான அரசியல் பகடிக்காகத் தன் தார்மீகத்தை ஒரு நிமிடம் கைகழுவியிருக்கிறார் என்கிறபோது, ராதாரவிக்களும், ராஜேந்திரபாலாஜிகளும் மன்னிக்கப்பட வேண்டியவர்களே.
#I condemn an irresponsible PM
 வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்