தமிழக பட்ஜெட் 2019 – 20: மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அறிவிப்புகள் எவை?

,வெளியிடப்பட்டது
தமிழக அரசின் 2019 – 20 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, துணைமுதல்வர் O. பன்னீர்செல்வம் அவர்களால் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கமாக அனைத்து ஊடகங்களும் பட்ஜெட் 2019 – 20 சிறப்பு அம்சங்களைப் பட்டியலிட்டுக்கொண்டிருக்கின்றன. இன்னும் ஓரிரு நாட்களுக்கு இது தொடர்பான விவாதங்கள் காட்சி ஊடகங்களில் முக்கியமானதாக இடம்பெறும். கல்வி, மருத்துவம், பொதுப்பணித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை என அனைத்துத் துறைகளுக்கான ஒதுக்கீடு குறித்தும் செய்திகள் இடம்பெறும். ஆனால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை குறித்து பட்ஜெட்டில் சொல்லப்பட்டவை எவை என எந்த ஊடகமும் கண்டுகொள்ளாது.  அதனால்தான் இதோ! இப்போதே மாற்றுத்திறனாளிகள் நலத்துறை குறித்து தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதை முக்கியம் எனக் கருதுகிறது உங்கள் வெற்றித்தடாகம்.
graphic பட்ஜெட் தாக்கல் செய்யும் துணைமுதல்வர் 
மாற்றுத்திறனாளிகள் நலன்
1.       மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016ஐ நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாகத் திகழ்வதுடன், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாநில அளவில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியத்தை உருவாக்கியுள்ளது.
2.        மாற்றுத்திறனாளிகளுக்கான சுய வேலைவாய்ப்பினை ஊக்குவிக்க, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விளிம்பு உதவித்தொகை 10000 ரூபாயிலிருந்து 25000 ரூபாயாக 2018 – 19 ஆண்டுமுதல் உயர்த்தப்பட்டுள்ளது.
3.        தசைச்சிதைவு நோயினால் பாதிப்படைந்தோர், முதுகுத் தண்டுவடம் பாதிப்படைந்தோர், மூளை முடக்குவாதத்தினால் பாதிப்படைந்தோருக்காக, தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள், இரு கால்கள் பாதிப்படைந்தோருக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் போன்ற நவீன உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதாகவும், தன்னிச்சையாக இயங்குவதற்காகவும், வழங்கப்பட்டு வருகின்றன. தற்போதைய தேவையைக் கருத்தில்கொண்டு, 2019 – 20 ஆம் ஆண்டிற்கு இதற்கான ஒதுக்கீடு உயர்த்தப்பட்டு, 3000 சிறப்பு சர்க்கர நாற்காலிகளும், 3000 பெட்ரோல் ஸ்கூட்டர்களும் வழங்கப்படும்.
4.        இது தவிர, செவித்திறன் பாதிப்படைந்தோருக்கான காதுக்குப்பின் அணியும் காதொலிக்கருவிகளும், பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான உயர்தொழில்நுட்ப ஊன்றுகோல்களும் வழங்கப்படுகின்றன.
5.        2019 – 20 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட,மதிப்பீடுகளில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 572.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
குறிப்பு: முந்தைய பதிப்பில் கடந்த 2018 – 19 நிதிநிலை அறிக்கை தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. நேர்ந்துவிட்ட தவறுக்கு வருந்துகிறோம்.
ஆசிரியர்க்குழு.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்