வெற்றிகரமாய் நடந்து முடிந்தது, மாணவர்களின் வெற்றியைக் கோருகிற நிகழ்ச்சி

,வெளியிடப்பட்டது

உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வழிகாட்டல் பயிலரங்கு (Career Guidance).
graphic நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களின் புகைப்படத் தொகுப்பு

மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு பயில்கின்றனர், என்ன பணிகளை ஆற்றுகின்றனர் என்பதைவிட, மாற்றுத்திறனாளிகளால் பயில முடியுமா, பல்வேறு பணிகளை ஆற்ற முடியுமா என்பது குறித்தான விழிப்புணர்வு கூட பெருமளவு சமூகத்தில் இல்லை என்பதே நிதர்சனம். அப்படியிருக்க மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டி, வழிகாட்டுவதே மாற்றுத்திறனாளிகளுக்கான நல அமைப்பின் முதன்மையான பணியாகும். ஆகவே எமது ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம் தொடங்கிய முதல் ஆண்டில் இருந்தே பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்தான வழிகாட்டல் பயிலரங்கு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பங்குபெறும் வகையில் பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு மேனிலைப் பள்ளிகள் அமைந்துள்ள தஞ்சாவூர், திருச்சி, பூவிருந்தவல்லி (சென்னை) ஆகிய மையங்களில் மூன்று வெவ்வேறு தினங்களில் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
தஞ்சாவூர்:
graphic மேலே இடமிருந்து திரு. சுரேஷ், திரு. சுந்தரேசன். கீழே இடமிருந்து திரு. குமரேசன், திரு. அன்சாரி.

இந்த ஆண்டின் முதல் வழிகாட்டல் பயிலரங்கு தஞ்சாவூர், பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு மேல்னிலைப் பள்ளியில் 5.1.2019 அன்று நடத்தப்பட்டது. பயிலரங்கின் நான்கு நிகழ்வுகளில் முதலாவதாக திரு. சுரேஷ் அவர்கள் (பட்டதாரி ஆசிரியர், அச்சிருபாக்கம்) தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் ஆங்கில மொழி ஆளுமை மற்றும் மென்திறன்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். அடுத்ததாக திரு. சுந்தரேசன் (பரோடா வங்கி) அவர்கள் பார்வைத் திறன் மாற்றுத்திறனாளிகள் வங்கிகளில் பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தது மட்டுமின்றி வங்கி தொடர்பான என்னென்ன பணிகளை, எவ்வாறு அடைவது என்பது குறித்து விளக்கினார்.
மூன்றாவது நிகழ்வாக திரு. குமரேசன் அவர்கள் (புக் ஷேர் இணையதளத்தின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர்) மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் பற்றியும் அவற்றிற்குத் தயாராகும் வழிமுறைகள் குறித்தும் விளக்கினார். இறுதி நிகழ்வாக திரு. அன்சாரி அவர்கள் (விரிவுரையாளர், நேஷ்னல் சட்டக் கல்லூரி திருச்சி) பார்வைத் திறன் மாற்றுத்திறனாளிகளும் சட்டம் பயின்று சட்டக் கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் அல்லது சட்டம் தொடர்பான நீதிமன்றப் பணிகளில் ஈடுபட முடியும் என்பதை விளக்கினார்.
graphic மேலே இடமிருந்து செல்வி. சித்ரா, திரு. சரவணமணிகண்டன். கீழே இடமிருந்து தலைமை ஆசிரியர் திரு. மோகன், திரு. ஜெயபாண்டி. நடுவில் திரு. சுரேஸ்குமார்.

முன்னதாக தஞ்சாவூர், பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு மேல்னிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. மோகன் அவர்கள் தலைமை வகித்து இப்பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். மேலும் ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் தலைவர் செல்வி. சித்ரா அவர்கள் முன்னிலையில், துணைச் செயலாளர் திரு. சரவண மணிகண்டன் அவர்கள் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்க, நிறைவாக செயற்குழு உறுப்பினர் திரு. ஜெயபாண்டி அவர்கள் நன்றியுரை வழங்கினார். மேற்கூறிய அனைத்து நிகழ்வுகளையும் துணைத் தலைவர் திரு. சுரேஷ்குமார் அவர்கள் மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் ஏற்பாடு செய்திருந்தார்.
திருச்சி:
graphic துறைசார் வல்லுநர்கள் நால்வரின் புகைப்படங்கள்

தஞ்சை நிகழ்வின் நிறைவான வெற்றி அடுத்த நாள் நடந்த திருச்சி நிகழ்விலும் அப்படியே எதிரொளித்தது. பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி திருச்சியில் கடந்த 6.1.2019 அன்று நடந்த பயிலரங்கில், உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
சட்டக்கல்வி குறித்த தனது ஆலோசனைகளை திருச்சி மாணவிகளுக்கும் வழங்கிய திரு. அன்சாரி அவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான  புதிய சட்டம் குறித்த  விழிப்புணர்வு தொடர்பான பயிலரங்கு ஒன்று, பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட வேண்டும் என சங்கத்திடம் தனது கோரிக்கையை முன்வைத்தார். அமேசான் நிறுவனத்தில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான இணைய அணுகல் பரிசோதகராகப் (Accessibility tester) பணியாற்றும் திரு. பிஜோன் அவர்கள், துறையில் பார்வையற்றோருக்குக் காணப்படும் பணிவாய்ப்புகள் குறித்து விளக்கினார்.
திரு. சிவானந்தம் அவர்கள் வங்கித்துறையில் இருக்கிற பல்வேறு பணிகள் குறித்துச் சொன்னதோடு, அதற்காக வங்கிகள் நடத்தும் பல்வேறு தேர்வுகள் பற்றியும் விரிவாக விளக்கினார். திரு. மருதுபாண்டியன் அவர்கள், போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள பல்வேறு வழிமுறைகளை சில எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியது, மாணவிகளுக்கு உற்சாகமூட்டுவதாக அமைந்தது.
graphic மேலே இடமிருந்து செல்வி. சித்ரா, தலைமை ஆசிரியர் திருமதி. தமிழ்ச்செல்வி. கீழே இடமிருந்து திருமதி. சோபியா மாலதி, திருமதி. விசித்ரா. நடுவில் திரு. சுப்ரமணியன்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. M. தமிழ்ச்செல்வி நிகழ்விற்குத் தலைமை ஏற்க, சங்கத்தின் தலைவர் செல்வி U. சித்ரா அவர்களின் முன்னிலையில் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார் சங்கச் செயற்குழு உறுப்பினர் திருமதி. சோஃபியா மாலதி. சங்கப் பொருளாளர் திரு. V. சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்க, செயற்குழு உறுப்பினர் திருமதி. V. விசித்ரா அனைவருக்கும் நன்றி பகர்ந்தார். பள்ளியின் மூத்த ஆசிரியர் திரு. அஷோக் குமார் அவர்களின் ஒத்துழைப்போடு, நிகழ்வைச் சிறப்புடையதாக ஏற்பாடு செய்திருந்தார் சங்கப் பொருளாளரும் அதே பள்ளியின் கணினிப் பயிற்றுனருமான  திரு. V. சுப்பிரமணியன்.
பூவிருந்தவல்லி:
graphic மேலே இடமிருந்து திரு. பாண்டிராஜ், திருமதி. முத்துச்செல்வி. கீழே இடமிருந்து திரு. வினோத் பெஞ்சமின், தலைமை ஆசிரியர் திருமதி. ஜாக்குலின் லதா. நடுவில் செல்வி. சித்ரா.

மிகவும் ஆவலோடும், பரபரப்போடும் எதிர்பார்க்கப்பட்ட பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டல் பயிலரங்கு, தொடக்கம் முதல் இறுதிவரை மாணவர்களின் உற்சாகமான பங்கேற்பால் அதன் வெற்றிக்கோட்டைத் தொட்டது. கடந்த 27.01.2019 அன்று நடைபெற்ற நிகழ்விற்குத் தலைமை ஏற்றார் பள்ளியின் முதல்வர் திருமதி. ஜாக்லின் லதா.
பல்வேறு பொதுவான தேர்வுகள், அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து மாணவர்கள் ஏற்கும் வகையில் அவர்களுக்கு விளக்கினார் இந்தியன் வங்கி ஊழியர் திரு. பாண்டியராஜ் அவர்கள். பார்வையற்றோருக்குக் காத்திருக்கும் சட்டக்கல்வி தொடர்பான வாய்ப்புகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டம் 2016 (RPD Act 2016) குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தினார் அலகாபாத் வங்கியின் கிளை மேலாளர் திருமதி. முத்துச்செல்வி அவர்கள். டிசிஎஸ்ஸில் (TCS) பணிபுரியும் திரு. வினோத் பெஞ்சமின் அவர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் பார்வையற்றோர் பணிவாய்ப்புகள் பெற, தேவைப்படும் அடிப்படைத் திறன்கள் குறித்து மாணவர்களோடு உரையாடினார்.
நிகழ்வில் சங்கச் செயலர் திரு. கா. செல்வம், துணைச்செயலர் திரு. ப. சரவணமணிகண்டன் மற்றும் உறுப்பினர் திரு. சூரியபிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளியின் தன்னார்வ வாசிப்பாளரும், சங்கத்தின் உறுப்பினருமான திருமதி. வளர்மதி அவர்களின் ஒத்துழைப்போடு, நிகழ்வைச் சிறப்புடையதாக ஏற்பாடு செய்திருந்தார் சங்கத்தலைவரும் அதே பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுபவருமான  செல்வி சித்ரா அவர்கள்.
கடந்த ஆண்டு ஒவ்வொரு மையத்திலும் ஒரு நாள் முழுவதும் பயிலரங்கு நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நெருங்கிவிட்ட காலச் சூழலின் காரணமாக அரை நாள் மட்டுமே நடத்த முடிந்தது. ஆனாலும் ஒவ்வொரு மையத்திலும் மாணவர்கள் ஆர்வமுடன் சந்தேகங்களைக் கேட்ட போது நாங்கள் விதைத்த விதைகள் முளைவிடத் தொடங்கியிருப்பதை உணர்ந்து பங்களிப்பு செய்த அனைத்துக் கருத்தாளர்களையும் நன்றியுடன் நினைவு கூர்கிறோம். முளை விட்ட விதைகள் வனமாகும்; வனமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் வரும் ஆண்டுகளிலும் அனைவரது ஆதரவையும் வேண்டுகிறது ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம்.

வெற்றித்தடாகம், நமக்கான ஊடகம்: நமக்கு நாமே ஊடகம்.

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்