பணமதிப்பு நீக்க பாதிப்பு: கண்ணை மூடிக்கொண்டு வடிவமைத்த பணத்தாள்கள்

,வெளியிடப்பட்டது

பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளின் புழக்கத்திற்கு உகந்ததாக இல்லை எனத் தெரியவருகிறது.
ஆஷுதோஷ் ஷர்மா

ஆஷுதோஷ் ஷர்மா

சேஞ்ச்.ஓர்க் (change.org) என்ற இணையத்தின் வாயிலாக, இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பிரதமர் நரேந்திரமோதி, ஊனமுற்றோருக்கான அதிகாரமளித்தல் துறை, சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள இணையவழி மனுவில் சில முக்கியமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
அவை; 1. தானி ஓட்டுநருக்கு இருபது ரூபாய்க்குப் பதிலாக அறியாமல்
ஐநூறு ரூபாய் கொடுத்துவிடுகிறீர்கள். அவர் சென்ற சில
நிமிடங்களுக்குப் பிறகு நீங்கள் இந்த தவறை உணர்கிறீர்கள். அப்போது
உங்களின் மனநிலை என்னவாக இருக்கும்?
2. உங்கள் அனைத்துப் பணப்பரிமாற்றங்களிலும் உங்களுக்குப்
பணத்தாள்களை, நாணயங்களை மற்றும் மொத்தத்தொகைகளை
அடையாளம் காண வழியே இல்லை எனும்போது, நீங்கள் எப்படி
உங்கள் அன்றாடத்தைக் கழிப்பீர்கள்?
3. ஒவ்வொரு முறை நீங்கள் பணத்தைச் செலவிடும்போதும், பெறும்போதும்
இன்னொருவரைச் சார்ந்தே அதனை அறிந்துகொள்ள இயலுமாயின்,
அதை எப்படி உணர்வீர்கள்?
அச்சமூட்டுவதாகவும், ஒடுக்குமுறையாகவும் தோன்றவில்லையா? இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில்,
துரதிஷ்டவசமாக, மேற்கண்டவைதான் இந்தியாவில் வாழ்கிற ஐம்பது லட்சம் பார்வையற்றோர்  மற்றும் சில மில்லியன்கள் எண்ணிக்கையில் இருக்கிற குறைப்பார்வையுடைய முதியவர்களின் அன்றாடமாகியிருக்கிறது. என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய 50 100 200 ரூபாய் தாள்கள்

90களில், பல்வேறு வடிவங்களிலான இரண்டு ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே இதுபோன்ற பிரச்சனைகளை பார்வையற்றோராகிய நாங்கள் சந்தித்து வந்திருக்கிறோம் என்கிறார் கொல்கத்தாவைச் சேர்ந்த பார்வையற்றோர் சங்கத்தின் (Blind Persons Association) மூத்த உறுப்பினர் அமியோ பிஸ்வாஸ்.
நாங்கள் நாணயத்தை அடையாளம் காணுவதில், அதன்  வடிவம், அளவு, பரப்பு மற்றும் அதன் எடையைக்கூட கணக்கில் எடுத்துக்கொள்வோம். ஆனால், ஒவ்வொரு நாணயங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் இருப்பது, அடையாளம் காணுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
கடந்த 2016 முதல், நடுவண் வங்கியானது 10, 50, 100, 200, 500, 2000 ஆகிய மதிப்புகளில் புதிய வடிவிலான பணத்தாள்களை அறிமுகம் செய்து வருகிறது. பழைய பணத்தாள்களோடு ஒப்பிடுகையில், அளவில் இவை வேறுபட்டவையாகக் காணப்படுகின்றன.
புதிய தாள்களை வேறுபடுத்திக் கண்டறிவது கடினமாக உள்ளது. நாங்கள் தாள்களின் நீளம் மற்றும் அகளத்தைத் தடவிப் பார்த்து, அதனை அளவிடுவதன் மூலம் அதன் மதிப்பை அடையாளம் காண்கிறோம். அளவில் பெரியவை அதிக மதிப்புடையவை.என்று கூறும் பிஸ்வாஸ்,
ஆனால், புதிய 500 மற்றும் 2000 பணத்தாள்கள், பழைய குறைந்த மதிப்புடைய 100 ரூபாய் தாளைக் காட்டிலும் அளவில் சிறியதாக இருக்கின்றன. புதிய 50 மற்றும் 200 பணத்தாள்களின் அறிமுகம் நிலைமையை மேலும் மோசமாக்கி வருகிறது. ஏனெனில், நாணயங்களைப் போலவே, இந்த இரண்டு மதிப்புகளுக்குமான தாள்கள்  இரண்டு வேறுபட்ட அளவுகளில் புழக்கத்தில் இருக்கின்றன. இது தொடர்பாக நாங்கள் பலமுறை உரிய அதிகாரிகளிடம் எங்கள் கோரிக்கைகளை வழங்கியதோடு, பல நினைவூட்டல்களையும் மேற்கொண்டுவிட்டோம். ஆனால் பலனில்லை.என்று புலம்புகிறார்.
அனில் அனேஜா

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் அனில் அனேஜா, புதிய தாள்களை அடையாளம் காண்பது மிகச்சவாலாக இருப்பதாகக் கூறுகிறார். முன்பெல்லாம், தாள்கள் அதன் மதிப்புகளுக்கேற்ப அதன் அளவில் ஏறுமுகமாக (ascending order) வடிவமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது 100 ரூபாய் தாள் 500 ரூபாய் தாலைவிட அளவில் பெரியதாக இருக்கிறது, என்று சொல்லும் அவர் மேலும்
பார்வையற்ற நபர் ஒருவர், தானாகவே புதிய தாள்களை அடையாளம் கண்டுகொள்ள இயலுமா என்பதே  முக்கிய விவாதம். நிச்சயமாக இயலாது. புதிய தாள்கள் பார்வையற்றவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாகவே உள்ளன.என்கிறார்.
இந்தியன் ரிசர்வ் வங்கியானது, பார்வைத்திறன் குறையுடையோருக்காக சில கோடுகள், தொட்டுணரும் வண்ணம் குறியீடுகள் என சில அம்சங்களைப் புதிய பணத்தாள்களில் சேர்த்திருந்தாலும், நடைமுறையில் அத்தகைய அம்சங்கள் தோல்வி கண்டுவிட்டன.  எதார்த்தமாக சில பார்வையற்றோரிடம் பேசிப் பார்த்தால், புதிய நோட்டுகள் விரைவில் கசங்கிவிடுவதையும், தடவிப் பார்த்து கண்டுபிடிப்பதெல்லாம் புதிய தாள்களில் சாத்தியமில்லை என்பதைச் சொல்வார்கள்.
இந்நிலையில், சில குறிப்பிட்ட புதிய தாள்களில் பொறிக்கப்பட்ட குறியீடுகளை அகற்றுவது என்கிற இந்தியன் ரிசர்வ் வங்கியின் முடிவானது, நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது. பொது வேலைவாய்ப்புகளில் ஊனமுற்றோருக்கு சமவாய்ப்பைக் கோரும் சட்டப் பிரிவு 16 மற்றும் ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016 ஆகியவற்றை செயலாக்க வேண்டி, பார்வையற்றோரின் நலன் பேணும் பல அமைப்புகள் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 226ன்கீழ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.
வழக்கறிஞர் சொராப் பேனர்ஜி, இரண்டு தாள்களுக்கிடையே, அதன் நீளம் மற்றும் அகளத்தில் 10 மில்லி மீட்டர் வேறுபாடு இருக்கவேண்டும் என வலியுறுத்துகிறார். இந்தப்  பொதுவான அனுகுமுறையால்தான், உலகில் எளிமையாக அடையாளம் காணக்கூடிய  பணத்தாள்களில் ஒன்றாக இந்தியப் பணத்தாள்கள் இருந்தன.என்கிறார். மேலும் புதிய நாணயங்களில் தொட்டுணரக் கூடிய குறிகளோ, அடையாளம் காணக்கூடிய அம்சங்களோ  எதுவும் இல்லை, பெரும்பாலும் அவை அளவிலும், வடிவத்திலும் ஒரே மாதிரியாகவே தென்படுகின்றன. தாள்களில் வார்க்கப்படும் புடைப்புகள் (imprints) புழக்கத்திற்கு வந்த சில நாட்களிலேயே அழிந்துபோகின்றனஎன்கிறார். இவர் புதிய தாள்கள் விவகாரத்தில் தேசியப் பார்வையற்றோர் சம்மேளனத்தின் (AiCFB) சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பவர்.
ஆனால், பார்வைத்திறன் குரையுடையோரின் சிறப்புத் தேவைகளை மனதில்கொண்டு, புதிய தாள்களில் மகாத்மா காந்தி மற்றும் அசோகர் தூண் உருவங்கள், மேடுறுத்தப்பட்ட அல்லது செதுக்கப்பட்ட முறையில் அச்சடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, தாள்களின் இடது மற்றும் வலது பக்கங்களில் சில கோடுகள் அடையாளக்குறிகளோடு அச்சடிக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ. 50, 100, 500 மற்றும் 2000 பணத்தாள்கள் முறையே, ஒரு தொகுதிக்கு (block)மூன்று, இரண்டு தொகுதிக்கு நான்கு, மூன்று தொகுதிக்கு ஐந்து மற்றும் ஐந்து தொகுதிக்கு ஏழு என்ற அளவில் செதுக்கப்பட்ட கோடுகளைத் தாங்கி வெளிவருகின்றன என்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கியின் இந்தக் கூற்றை மறுக்கும் வழக்கறிஞர் பேனர்ஜி, தாள்களில் செதுக்கப்படும் கோடுகள் மற்றும் குறியீடுகளைப் பார்வையற்றோரால் தடவி அடையாளம் காணமுடியாது என்று அடித்துக் கூறுகிறார்.
லாட்லி பானோ

உத்திரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் என்ற ஊரைச் சேர்ந்த தையல் தொழிலாளியான லாட்லி பானோ, தன் கையிலிருக்கிற 500 ரூபாய் புதிய தாளைக்கண்டு குழப்பம் அடைகிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு, இது இருபது அல்லது பத்து ரூபாய் தாளாக இருக்கலாம் எனச் சொல்கிறார். மேலும் அவர், பழைய ரூபாய் தாள்களைத் தன்னால் அடையாளம் காணமுடிந்தது, புதிய தாள்கள் இன்னமும் தனக்குப் பிடிபடவில்லை என்கிறார். புதிய ரூபாய் தாள்களால் ஒவ்வொரு பணம் சார் நடவடிக்கைகளில் நான் பிறரைச் சார்ந்தே இயங்கவேண்டியுள்ளது. இதற்கு முன்பு இப்படி இல்லைஎன்கிறார். ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும், பாலிமர் தாள்களில் மட்டுமே, செதுக்கப்பட்ட கோடுகள் உணரக்கூடிய ஓர் அம்சமாக இருக்கும், நம் நாட்டு காகிதத்தாள்களில் இது சாத்தியமில்லை என்கிறார்கள் புதிய பணத்தாள்கள் மற்றும் பல்வேறு வங்கி வசதிகள் குறித்து பார்வையற்றோரிடையே பிரச்சாரம் செய்யும் ஆர்வலர்கள்.
கடந்த விசாரணையின்போது, தாங்கள், ஒரு ஆப் உருவாக்கும் நிறுவனத்தோடு தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் புதிய பணத்தாளைக் கண்டறியும் ஆப் ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும், இந்திய ரிசர்வ் வங்கி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூறியது. எனினும், மொபைல் ஆப்கள், ஏன் பிரெயில்கூட இந்தப் பிரச்சனைக்கு உரிய தீர்வாக அமையாது. ஏனெனில், இன்னமும் கிராமப்புறங்களில் படிப்பறிவற்ற, தொழில்நுட்பம் அறியாத பார்வையற்றவர்கள் கனிசமாக இருக்கிறார்கள்.” என்கிறார் இந்தியப் பார்வையற்றோர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் JL. கவுல்.
இந்த விடையம் தொடர்பாக, மும்பை உயர்நீதிமன்றத்திலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மும்பையைச் சார்ந்த தேசிய பார்வையற்றோர் நிறுவனத்தின் (National Association of the Blind) செயல் இயக்குநர் பல்லவிகடம் நேஷ்னல் ஹெரால்டுவிடம் கூறும்போது, மும்பை உயர்நீதிமன்றம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு, ஏன் கடந்த சில ஆண்டுகளாக, பார்வையற்றவர்களால் பணத்தாள்கள் மற்றும் நாணயங்களை அடையாளம் காண இயலவில்லைஎன்று கேட்டு, கடந்த 2016 டிசம்பர் மாதத் துவக்கத்திலேயே அறிவிக்கை அனுப்பியிருக்கிறது. ஆனால், இன்னமும் ரிசர்வ் வங்கி அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை.என்கிறார். மேலும் அவர் கூறுகையில், இதுவரை 10 அமர்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு தேதிகள் ஒதுக்கப்பட்டாலும், நேரப் போதாமை காரணமாக, முறையாக விசாரணை நடைபெறுவதே கேள்விக்குறியாக உள்ளது. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அவை விசாரிக்கப்பட வேண்டும்என்று வலியுறுத்துகிறார்.
புதிய பணத்தாள்களின் வருகையால் பார்வையற்றோர் முடக்கப்பட்டிருப்பது குறித்து தனது கண்டனத்தை வெளியிடும் கவுல், ஓர் அரசின் புதிய கொள்கைகள்  மக்களுக்கான அதிகாரமளித்தல் என்ற நோக்கத்தில் அமைதல் வேண்டும். ஆனால், புதிய, அடையாளம் காண இயலாத பணத்தாள்களால், பல பார்வையற்ற தொழில் அதிபர்கள் மீண்டும் தற்சார்பு இழந்துவிட்டனர்என்கிறார் காட்டமாக. கடந்த 2016-17 நிதி ஆண்டில், பணத்தாள்கள் அச்சடிக்கும் செலவு ரூபாய் 7.965 கோடியாக அதிகரித்துள்ளதாக நடுவண் அரசு சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், பார்வையற்ற தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் அன்றாட இழப்புகளின் மதிப்பு, அவர்களால் உருவாக்கப்பட்ட பணிவாய்ப்புகள் மற்றும் அவர்களின் சமூக மற்றும் பொருளாதார சுதந்திரம் எதிர்கொண்டிருக்கிற இடர்களின் மதிப்பு என்பவை, அரசு வெளியிடும் அடையாளம் காண இயலாத தாள்களுக்காகும் செலவைவிட அதிகம் என்று வாதிடுகிறார்கள் பார்வையற்றோர் நலன் பேணும் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
அத்தோடு, வங்கிகளின் இணையதளங்கள் மற்றும் ஆப்கள் பார்வையற்றோரின் சிறப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யாத நிலையில், அவர்கள் வங்கி சேவை அல்லது மொபைல் வங்கி சேவையோடு ஏட்டியெம் சேவைகளும் பயன்படுத்துவதில் இடர்படுகின்றனர். மிகச்சிலரே வங்கிக் கணக்குகள் வைத்திருக்கின்றனற், அவர்களிலும் மிகச்சிலரே செக் புத்தகங்கள் மற்றும் ஏட்டியெம் கார்டுகள் வைத்திருக்கின்றனர். டிஜிட்டல் பணம் என்பது, அவர்களுக்கு முழுமையாக அனுக இயலாத ஒன்றாக இருக்கிறது. மேலும், வங்கி அலுவலர்கள் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்பது, பார்வைத்திறன் குறையுடையோரின் நீண்டநாள் குறையாக இருந்துவருகிறது. சிம் அட்டை வினியோகிப்பாளர்கள், கைரேகைகளை இந்திய ஆதார் நிறுவனத்தோடு இணைந்து பரிசோதிக்கும்போது, ஏன் அதே நடைமுறையை வங்கி அலுவலர்களும் பின்பற்றி பார்வையற்றோரின் கைரேகைகளைப் பரிசோதித்து உறுதிசெய்தல் கூடாதுஎன்று கேட்கிறார்கள் அவர்கள்.
ராஜ்பால் பாவனா

ப்லைண்ட் ரிலீஃப் அசோசியேசனில் (BRA) கணினிப் பயிற்றுநராகப் பணியாற்றும் ராஜ்பால், இந்திய தேசிய அறிவியல் அக்காடமியில் பணிபுரியும் பாவனா இருவரும் பார்வையற்ற கணவன் மனைவி. தற்போது நம்மிடையே பல வகையான பணத்தாள்கள் புழக்கத்திலுள்ளன. இது நமது பணப்பைக்கு உள்ளே இருக்கிற பைகளைவிட அதிகம். பணத்தைப் பெறும்போதும், செலவிடும்போதும் ஒருவித குழப்பமான மனநிலையோடே நாம் இருக்க வேண்டியிருக்கிறது,என்று ஆதங்கப்படும் ராஜ்பால், அதைப்போல, பல வேறுபட்ட வகையிலான நாணயங்கள் தற்போது புழக்கத்திலுள்ளன. ஒரே மதிப்பு கொண்ட நாணயங்களானாலும், அவை வேறுபட்ட வடிவங்கள், அளவுகள் மற்றும் எடைகளைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, மூன்று வகையான ஒரு ரூபாய் நாணயங்கள் உள்ளன. முன்பெல்லாம், பழைய தாள்களை அறியாமல் துணியோடு சேர்த்து துவைத்துவிட்டாலும், அவை உருக்குழையாமல் இருந்தன. ஆனால் இப்போது அது சாத்தியமில்லைஎன்றார்.
இந்த இணைய மனு, பார்வையற்றோருக்கு மறுக்கப்படும் பொருளாதார நீதி குறித்துப் பேசுவதோடு, நிதி மற்றும் வங்கி தொடர்பாக பார்வையற்றோர் எதிர்கொள்ளும் இடர்கள் குறித்து அரசு தன் பரிசீளனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வற்புறுத்துகிறது. அனைத்து வகையான பணப்பரிமாற்றங்கள், பணத்தாள்கள், நாணயங்கள், ஏட்டியம்கள், இணையதளங்கள் மற்றும் ஆப்கள் ஆகிய அனைத்தும் பார்வையற்றோர் உட்பட எல்லா ஊனமுற்றோரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட வேண்டும், இது படிப்பறிவற்ற பார்வையற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு  அதிகாரமளிக்கும், ஏமாற்றப்படுவதிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள், எங்களைப் பாதுகாப்பாக உணரச் செய்யுங்கள், நாங்கள் சுதந்திரமாகவும், மதிப்போடும் வாழ எங்களுக்கு வழி செய்யுங்கள்.என அந்த மனுவில் வேண்டப்பட்டுள்ளது.
என்ன ஈட்டுகிறோம், எவ்வளவு செலவிடுகிறோம் என்பது, கட்டாயம் எங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்த உரிமைக்கு நாங்கள் தகுதியானவர்கள்.என்று சொல்லும் பிஸ்வாஸ், பார்வையற்றோரின் சிறப்புத் தேவைகள் குறித்து அக்கறைகொள்ளுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறார்.
இந்திய ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?
16.பிப்பரவரி 2018 அன்று ரிசர்வ் வங்கியால் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், பார்வையற்றோரால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து வேண்டல்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டியவை எனவும், செய்யப்பட்ட முறையீடானது, பயனற்றது எனவும் கூறியது. எதிர்மனுதாரர்களுக்கு எதிராக மனுதாரர்கள் எவ்விதமான பலன்களையும் பெற வழியில்லை என்பதால், இந்த மனு உரிய தண்டத்தொகையுடன் தள்ளுபடி செய்யத் தக்கதேஎன நீதிமன்றத்தை அந்த மனு வற்புறுத்தியது.
அதன் சில முக்கிய அம்சங்கள் இதோ:
புதிய 500 2000 தாள்கள்

1.   பார்வையற்றவர்கள் புதிய பணத்தாள்களைக் கண்டறிவதில்
சிக்கல்களை எதிர்கொள்வதை நிரூபிப்பதற்கான உரிய
உதாரணங்களைத் தர மனுதாரர்கள் தவறிவிட்டனர்.
2.   நாணயங்களின் மதிப்பு, வடிவமைப்பு, உள்ளடக்கம், அளவு தொடர்பான
அனைத்து விடயங்களும் 2011 நாணயச் சட்டத்தின்படி, (Coinage Act 2011)
நடுவண் அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவை. நடுவண் அரசால்
தயாரிக்கப்பட்ட நாணயங்களைப் புழக்கத்திற்கு விடுவதாக ரிசர்வ்
வங்கியின் கடமை வரையறுக்கப்பட்டுள்ளது.
3.   இந்தியாவில் பணத்தை வெளியிடும் தனித்த அதிகாரம் பெற்றது ரிசர்வ்
வங்கி. ஆனால், வடிவமைப்பு, உருவாக்கம், தாள்களுக்கான
மூலப்பொருட்கள் தொடர்பான ரிசர்வ் வங்கி தலைமைக்குழுவின்
பரிந்துரையின்படி, நடுவண் அரசே இறுதி செய்கிறது.
4.   ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் எந்தப் பிரிவும் பார்வையற்றோரின்
கருத்துகளுக்கேற்றதான எந்த ஒரு முறையையும் நிர்ணயித்துக்
கூறவில்லை.
5.   ஊனமுற்றோர் சமவாய்ப்பு உரிமையை அனுபவிக்கவும், மதிப்பு
வாய்ந்த வாழ்க்கை வாழவும், பிறரோடான அவன்/அவளின் சம
பங்கேற்பை ஏற்பதுமான சூழலைத் தொடர்புடைய அரசுகள் உறுதி
செய்ய வேண்டும்என்கிற ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 3
பிரிவு (1)ஐ புதிய பணத்தாள் நடவடிக்கை எந்தவகையில்
புறக்கணித்துள்ளது என்பது குறித்த உறுதியான மறுக்கமுடியாத
உதாரணங்கள் எதையும் மனுதாரர்கள் எடுத்துக்காட்டவில்லை.
6.   புதிய தாள்களின் அம்சங்களில் ஒன்றான அலவைக் கொண்டே,
முழுப்பார்வையற்றவர் அதன் மதிப்பை அடையாளம் கண்டுகொள்வார்
என்பதால், அந்த அம்சம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
7.   ரூ. 50 போன்ற குறைமதிப்பு கொண்ட தாள்களிலிருந்து, செதுக்கப்பட்ட
அடையாளங்களை அகற்றுவது என்பது, ரிசர்வ் வங்கி
தலைமைக்குளுவால் பரிந்துரைக்கப்பட்டு நடுவண் அரசால்
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். குறைந்த மதிப்பு கொண்ட
தாள்களில் அளவே தெரிந்துகொள்வதற்கான முக்கிய அம்சமாகும்.
செதுக்கப்பட்ட அடையாளக்குறிகளைச் சார்ந்திருத்தல்
வரையறுக்கப்பட்டது. செதுக்கப்பட்ட அடையாளக்குறிகள் தடவிப்
பார்க்க உகந்ததாக இல்லை என்பதோடு, அவை அழுக்கடைந்து
அடையாளம் காண முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. செதுக்கப்பட்ட
கோடுகள் மற்றும் குறிகளையுடைய தாள்கள் அச்சடிப்பதால்
செலவுவெகுவாக அதிகரிக்கிறது.
8.   மும்பையிலுள்ள  சேவியர் பார்வைச்சவாலுடையோருக்கான வளமையம்,
அகமதாபாத் பார்வையற்ற நபர்களின் சங்கம், (blind Person Association)
தேசிய பார்வையற்றோர் சங்கம் (NAB) மும்பை மற்றும்
பார்வையற்றோருக்கான தேசிய நிறுவனம் டேராடூன் போன்றவற்றின்
பின்னூட்டங்களிலிருந்து  ரிசர்வ் வங்கி வழிகாட்டல்களைப்
பெற்றுள்ளது.
9.   பழைய 50 ரூபாய் தாள்களுக்கும் புதிய 200 ரூபாய் தாள்களுக்கும்
இடையே சில ஒற்றுமைகள் இருக்கலாம். பழைய 50 ரூபாய் தாள்கள்
குறித்த கால இடைவெளிகளி திரும்பப் பெறப்படுவதால், இந்தப் பிரச்சனை
நிலையற்றது.
10.  பணம் அச்சடிக்கும் செலவைக் குறைக்கவும், சர்வதேச விதிகளுக்கு
உட்பட்டு, இந்திய பணத்தை வடிவமைக்கும் பொருட்டு, அளவு
குறைக்கப்பட்ட புதிய வரிசை எண்களைக் கொண்ட ரூபாய்த் தாள்கள்
அறிமுகப்படுத்தப்பட்டன.
11.  பார்வையற்றவர்கள் தொடர்ச்சியாக துன்பத்திற்குள்ளாகிறார்கள் என்கிற
மனுதாரரின் வாதம், பொதுப்படையான, தெளிவற்ற மற்றும் அடிப்படை
ஆதாரமற்ற செய்தியாகும்.
12.  அனைத்துத் தரப்பின் அதிலும் குறிப்பாகப் பார்வையற்றோருக்கான
அமைப்புகளின் கருத்துகளை மிகக் கவனத்துடன் உள்வாங்கிக்கொண்டதன்
உச்சநிலையாக அறிமுகப்படுத்தப்பட்டவைதான்  செதுக்கப்பட்ட கோடுகள்
போன்ற முற்றிலும் புதுமாயான அம்சங்கள்.
13.  பணத்தாளின் எந்த அம்சமும் பிழை ஏற்படுத்துவதாகவோ,
நேர்த்தியானதாகவோ இருக்க இயலாது. மேலும், பல அம்சங்களைத்
தகவமைத்தல் அதன் பரப்பால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
14.  பார்வையற்றோருக்குப் பொருத்தமான பல்வேறு அம்சங்களைப்
பரிசீளிக்கும் அதேசமயம், பணத்தாள்களின் முக்கியப் பாதுகாப்பு
அம்சங்களையும் விட்டுக்கொடுக்க இயலாது. இதனை உறுதிப்படுத்தும் சுய
உரிமை ரிசர்வ் வங்கிக்கு உண்டு.

மூலச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க:
copyright national herald
தமிழில் ப. சரவணமணிகண்டன்
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்