திறமைக்குக் கைகொடுங்கள்:

,வெளியிடப்பட்டது

மாணவி அபினயா
பார்வைத்திறன் குறையுடையோருக்கான திருச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பாடும் பறவை அபினயா. எட்டாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு சங்கீதப் பயிற்சி எல்லாம் கிடையாது. கேட்டதைப் பாடுகிறாள், ஆனால், பிறர் கேட்டுச் சிலிர்க்கும்படி பாடுகிறாள். கண்ணைமூடிக்கொண்டு அவள் எதிரே அமர்ந்துவிட்டால், பிரத்யேகமான தியான வகுப்புகள் தேவையில்லை என்றே தோன்றுகிறது.
சங்கீதத்தின் இந்த அக்கினிக் குஞ்சை நான் அடையாளம் காட்டிவிட்டேன். இனி பொறுப்பு உங்கள் கையில். உடனே சாப்பாடு, பண உதவி என்றெல்லாம் ஆரம்பிப்பவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களுடன் ஒரு வேண்டுகோள் கொஞ்சம் அப்படியே ஒதுங்கிக்கொள்ளுங்கள். உங்கள் பாவக்கணக்கை நேர் செய்ய இங்கு இடமில்லை.
தொலைக்காட்சியில் பாட வைத்துவிடலாம் என்ற யோசனையெல்லாம் நீண்டகாலப் பயன்தராது. அவளுக்கு தீவிர சங்கீதப் பயிற்சி தேவை. அதுவும் அவள் படிக்கும் இடத்திலேயே கிடைக்கவேண்டும். ஏன் இதை நான் அழுத்தமாகச் சொல்கிறேன் என்றால், இன்று ஜொலிக்கும் பார்வையற்றோரில் பெரும்பாலோர் அவர்களின் திறமையால் மட்டுமல்ல, குடும்பப் பின்னணி, சென்னை வாசி என்ற காரணங்களாலுமே உலகத்தால் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை, அதுதான் கசக்கிறது.
பெரும்பாலும் பார்வையற்றவர்கள் நன்றாகப் பாடும் திறமை பெற்றவர்கள்தான். அதனை மெருகேற்றுவதுதானே மறுவாழ்வு. அப்படியானால், அரசு தோற்றுவிட்டது. பெரும்பாலான பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் இல்லை. இன்னும் திறந்து சொன்னால், பல பள்ளிகளில் இசை ஆசிரியர்ப் பணியிடமே தோற்றுவிக்கப்படவில்லை. எனவே அரசு ஆபத்திற்கு உதவாது. நான் தனிமனிதர்களை நம்புகிறேன். அவர்கள் கைகொடுப்பார்கள் என்றே காத்திருக்கிறேன்.
செல்லம் அபினயா
அவளிடம் திறமை, ஆர்வம், முயற்சி அனைத்துமே இருக்கிறது. அவற்றை முறையாக வெளிக்கொணர களம் அமைத்தால், எங்கள் கண்ணம்மா அபினயா இசை வானில் இன்னொரு ஜோதியாய் மிளிர்வாள். ஆம்! இன்று பார்வையற்றோரின் நம்பிக்கை நட்சத்திரமாய்த் திகழும் அடங்காதே படப் பின்னணிப் பாடகி ஜோதியைத்தான் சொல்கிறேன்.
நடவுக்கு ஏங்குகிறது நம் கண் முன்னே விதை,

ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகளுக்கான நலச்சங்கம்

பகிர

1 thought on “திறமைக்குக் கைகொடுங்கள்:

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்