தடாலடி பெரியதுரை, தடதடக்குது நெல்லை:

,வெளியிடப்பட்டது

ஊனமுற்றோருக்கான சட்டம் 2016 (RPD act 2016) பிரிவு 92.ஏயின்கீழ் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ஒருவர்மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி தமிழகத்தில் பதியப்படும் முதல் தகவல் அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன

?

கடந்த இரண்டு நாட்களாக மேற்கண்ட செய்தி வாட்ஸ் ஆப்பில் மாற்றுத்திறனாளிகளால் பெருமிதத்தோடு பகிரப்பட்டுக்கொண்டிருக்க, உண்மையில் நடந்ததை அறிந்துகொள்ள வெற்றித்தடாகம் செய்திகள் சார்பாக, பேராசிரியர் பெரியதுரை அவர்களைத் தொடர்புகொண்டோம். அவர் நம்மிடம் நடந்தது குறித்து விவரித்தார்.
திரு. பெரியதுரை அவர்களின் புகைப்படம்
நான் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியைச்சேர்ந்தவன். எங்கள் ஊரில் ஒரு கோயில் தொடர்பாக, பொதுமக்களுக்கும் ஒரு தனிநபருக்குமிடையே நீண்ட நாட்களாகவே பிரச்சனை இருந்துவருகிறது. கோயிலைத் தனது என்று அந்த நபர் சொந்தம் கொண்டாடுகிறார். பொதுமக்கள் தரப்பில் இந்தப் பிரச்சனையை நான் முன்னெடுத்துச் செல்வதால், என்மீது காவல்நிலையத்தில் புகார் செய்துவிட்டார்.
கடந்த 5ஆம் தேதி, விசாரணைக்காகக் காவல்நிலையம் சென்ற என்னை, ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் திரு. சிதம்பரம் அவர்கள் என் உடல்க்குறைபாட்டைச் சுட்டித் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தித்  திட்டிவிட்டார். இதையடுத்து நான் ஏடிஎஸ்பி அவர்களிடம் புகார் செய்யவே, தற்போது திரு. சிதம்பரம் மீது முதல்த்தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதான் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தபின் தமிழகத்தில் பதியப்படும் முதல் முதல் தகவல் அறிக்கையாகும். ஆனால், இதில் என்ன பெருமை இருக்கிறது? இதுபோன்ற ஏச்சுப் பேச்சுகளை பார்வையற்றோராகிய நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். உதாரணத்திற்கு, நமது பயணங்களில் நடத்துநரின் முகச்சுழிப்பு இல்லாமல் நம்மால் நமக்கான சலுகையை பயன்படுத்த முடிவதில்லை. நாம் எவ்வளவு பெரிய பொறுப்புகளில் பதவிகளில் இருந்தாலும், நாம் பாஸ் என்று சொல்லி நமது உரிமையைக் கேட்கும்போது, நடத்துநரும், ஒருவித எள்ளல் தொனியில், உரத்த குரலில், கொண்டா, எங்க போறஎன்று பலர் முன்னிலையில் கேட்பதும் நாம் உள்ளுக்குள் புழுங்குவதுமே நமது அன்றாடமாகிவிட்டதுஎன ஆதங்கத்துடன் முடித்தார்.

யார் இந்தப் பெரியதுரை

?

சேரன்மாதேவியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான திரு. பெரியதுரை அவர்கள், மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியலில், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். இவர், மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடை முறையாக அமல்ப்படுத்தாத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, கடந்த 2016 ஆம் ஆண்டு, பிப்பரவரி 13 ஆம் நாள் அன்று, மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த 23ஆவது பட்டமளிப்பு விழாவில் தனது முனைவர்ப் பட்டத்தை நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்றைய ஆளுநர் திரு. ரோசையா அவர்களிடமே திருப்பிக்கொடுத்துத் தனது அறவழிப் போராட்டத்தைத் தனிநபராக முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் பெரியதுரை போன்றவர்களின் மன உறுதியும், ஆக்கப்பூர்வமான தொடர்ச் செயல்பாடுகளுமே, பார்வையற்றோர் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாக அமையும்.
வாழ்த்துகள் பேராசிரியரே!
முந்தையது 
*
அடுத்தது 
பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்