ஒளிபடைத்த கண்ணினன் லூயிக்கு அஞ்சலி

,வெளியிடப்பட்டது
பாரிசிலுள்ள லூயி பிரெயில் நினைவிடம்

ஜனவரி 6 பிரெயில் முறையை உலகிற்கு வழங்கிய பார்வையற்றோரின் ஞானத்தகப்பன் லூயி பிரெயில் அவர்களின் நினைவுநாள். இந்த நாளில், 1852 அன்று லூயி அவர்கள் காலமானார். அவரின் கண்டுபிடிப்பை அவர் வாழும் காலத்தில் ஏற்க மறுத்த இந்தச் சமூகம், இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அவரின் கண்டுபிடிப்பான பிரெயில் முறைக்கு சரியான முழுமையான மாற்றாக எதையும் முன்வைக்கவில்லை என்பதே உண்மை.
ஒலிப்புத்தகம் கேட்கும் பார்வையற்றவர்

     
 சிலர், ஒலிப்புத்தகங்கள் (Audio-books) கணினித் திரைவாசிப்பான்கள் (Computer Screen-readers) போன்றவற்றை பிரெயிலுக்கு மாற்றாக முன்வைக்கலாம். அவையெல்லாம், இன்றைய துரித உலகில் பார்வையற்றோராகிய நாம் அறிவுத்தேடலில் பயன்படுத்தும் முக்கிய சாதனங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவை உருவாக்கத்திலும், பயன்பாட்டிலும் எளிமையானவை, வசதியானவை. ஆனால், அவை ஒருபோதும் பிரெயிலுக்கு மாற்றாகாது.
பிரெயில் மீ சாதனத்தின் புகைப்படம்
போட்டி நிறைந்த இக்காலகட்டத்தில், நாம் ஒரு துறையில் பாண்டித்தியம் பெற நமக்குப் பல்துறை அறிவு அவசியமாக உள்ளது. எனவே, காலமேலாண்மை என்ற கருத்து ஓங்கி ஒலிக்கும் இப்போது, பிரெயிலில் எழுதுவதைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டுக் கணினியில் தட்டச்சு செய்யப் பழகிவிட்டோம். இதைச் சொல்லும் இப்பொழுதுகூட, இக்கட்டுரையை  நான் கணினியில்தான் தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன். ஆனால், வாசிக்கும் அனுபவம் அப்படிப்பட்டதல்ல; எலக்குவன்ஸ், ஈ-ஸ்பீக் என எத்தனை வாசிப்பான்கள் வரிசைகட்டினாலும், விரல்களின் ஸ்பரிசங்களே மூளையை விழிப்பாக வைத்திருந்தன; மேற்சொன்ன வாசிப்பான்களின் தாலாட்டால் தூங்கிப்போன நமது மூளைகளின் துன்பியல் கதைகள் நம்மிடம் ஏராளம் ஏராளம். அதனால்தான் பள்ளிப்பருவத்தில் ஒரு பார்வையற்ற மாணவனுக்குக் காணப்படும் கூர்ந்த மதி, கல்லூரிப் பருவத்தில் அவனிடம் காணக்கிடைப்பதில்லை.
பிரெயில் எழுதுவதைத் தவிர்ப்பதில் நாம் சொல்லும் காலமேலாண்மை என்ற காரணத்தில்கூட சிறிதளவே உண்மை இருக்கிறது. நமது சோம்பேறித்தன மனநிலைதான் நம்மை பிரெயிலில் எழுதுவதைத் தவிர்க்கச் செய்கிறது. கொஞ்சம் காலச்சக்கரத்தைப் பின்னோக்கி நகர்த்தி யோசித்தால் இது புரியும்.
நம்மில் பலருக்கு நமது இளமைப்பருவத்தில் காதல் கடிதங்கள் எழுதிய அனுபவம் இருந்திருக்கும். எத்தனை எத்தனை தாள்களைக் குத்தி மேடாக்கி, மேன்மை தாங்கிய இலக்கியமாக மேம்படுத்தியிருக்கிறோம். அன்று, லூயி இராணுவ இரகசியங்களுக்கான வடிவத்தை பிரெயில் வடிவமாக மாற்றினார். இன்று, காதல் என்னும் இராணுவ இரகசியத்துக்காக பிரெயில் வடிவத்தைப் பயன்படுத்தி, வரலாற்றைப் புரட்டிப் போட்டிருக்கும் புரட்சியாளர்கள் நாம். உண்மையில் சிந்தியுங்கள்! வெறும் தகவல் பரிமாறும் நோக்கில்தான் நாம் இக்கடிதங்களை எழுதித் தள்ளினோமா? இல்லை. இது காதலைப் போன்றே, நானும் அவளும் மட்டுமே உணர்ந்து புரிந்துகொள்ளும் புரட்சிமொழி என்ற பெருமித மனநிலைதானே முக்கிய உந்துசக்தியாக இருந்தது.
      வளர்ந்துவிட்ட தொழில்நுட்ப உலகில், பிரெயில் மீ (Braille me) போன்ற கண்டுபிடிப்புகள் இன்னும் புதிய மாற்றங்களுடன் பார்வையற்றோரிடையே பயன்பாட்டிற்கு வரும்போது பிரெயில்தான் பார்வையற்றோராகிய நமது முதல் தெரிவாக இருக்கும் என்பதை பிரெயிலின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் எவரும் மறுக்கமாட்டார்கள். கருத்தரங்கில் தனது கட்டுரையை வாசித்துச் சமர்ப்பிக்கும் பார்வையற்றவருக்கு திரைவாசிப்பான்களும், ஒலிப்புத்தகங்களும் அறையில் வேண்டுமானால் உதவலாம், அம்பலத்தில் பிரெயில்தான் உதவும்.
ஏன் பிரெயில் அவசியமும் அடிப்படையுமான ஒன்று என்பதற்குச் சிறிய விளக்கத்தை முன்வைக்க விரும்புகிறேன். வகுப்பில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாரதியாரை அறிமுகம் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். பாரதி என்றவுடன் நமக்கு அவரின் கவிதைகள் பல நினைவுக்கு வரலாம். பார்வையுள்ள மாணவர்களுக்கு அவரின் முண்டாசு முகம் கண் எதிரே தோன்றும். ஆனால், பார்வையற்றோராகிய நமக்கு ப++++இ என்கிற பிரெயில் எழுத்துகளே முதலில் சிந்தனையில் தோன்றும் என்பதே நிதர்சனம்.
பார்வையற்றோராகிய நாம் உலகியலை அறிந்துகொள்ள நமக்குச் சொற்களே அதிகம் பயன்படுகின்றன. எல்லாச் சொற்களுக்கும் வடிவம் இருக்கிறது. பிரெயில் முறையை நாம் கைக்கொள்ளாதவரை, இந்த உலகின் எல்லாமும் நமக்குச் செவிவழிச் செய்திகளாகவே தங்கிவிடும். நாமும் அனைத்தும் அறிந்த, ஆனால் எழுதப்படிக்கத் தெரியாத ஒருவராகவே (illiterate person) தேங்கிவிடுவோம்.
எனவே, பிரெயில் முறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனைக் கற்கவும், பிறருக்குக் கற்பிக்கவும் முயல்வதே பார்வையற்ற சமூகத்தின் ஒருங்கிணைந்த, ஆளுமை நிறைந்த வளர்ச்சிக்கு உதவும். அத்தகைய முயற்சிதான், இந்த நாளில் பார்வையற்றோராகிய நாம் லூயி பிரெயிலுக்குச் செய்யும் மிகச்சிறந்த அஞ்சலி.
பகிர

1 thought on “ஒளிபடைத்த கண்ணினன் லூயிக்கு அஞ்சலி

  1. முற்றிலும் உண்மை சார். பிரைல்லின் முக்கியத்துவத்தை நான் வகுப்பறையில் ஆங்கில கவிதைகளை கற்பிக்கும் பொழுதும் கருத்தரங்குகளில் கட்டுரையை வாசிக்கும்போதும் எவ்வளவு இன்றியமையாதது என்பதனை உணர்ந்திருக்கிறேன்.

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்